தொழில் துறை வளர்ச்சி

தொழில் புரட்சி ஏற்படாத இந்தியாவில் தொழில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தொழில் மயமாக்குதலின் நோக்கமாகும். விவசாயத்தையே நம்பிகொண்டிருந்த நம் நாட்டில் தொழில்களை விரிவுபடுத்தி, பொருளாதார வளர்ச்சியையும், வளத்தையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் புதிய பொருளாதாரக் கொள்கை திட்டமிடப்பட்டது. தொழில் வளர்ச்சி அதிகமாதல், தன்னிரைவு, பொருளாதார சிக்கனம் ஆகியவை ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், தேசிய வருமானமும், தனி நபர் வருமானமும் பெருகும். உற்பத்தித் திறனும் பெருகும். நிதி நிறுவனம், போக்குவரத்து, தகவல் தொடர்பு வளரும்.

வேளாண்மை முறை செம்மைப்படும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். சந்தை பொருளாதாரம் பலப்படும், வறுமை வட்டம் சுருங்கும், ஏற்றுமதிப் பெருகும், நகர வளர்ச்சி, கல்வி மேம்பாடு, தேசியப் பாதுகாப்பு பலப்படும்.

பொதுத்துறை நிறுவனங்கள்

இந்தியா விடுதலை அடைந்த போது போர்த்தளவாடங்கள், இரயில் போக்குவரத்து, தபால் தந்தி, துறைமுகம் போன்ற சில தொழில்கள் மட்டுமே அரசின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. தொழில் புரட்சிக்குத் தேவையான கனரகத் தொழில்களைப் பொதுத்துறையில் அரசே தொடங்கியது. பொதுத்துறை தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும் பாதுகாப்பும், ஊக்கமும் கொடுக்கப்பட்டதால், இவை வியத்தகு வளர்ச்சியடைந்தது.

 1. பருத்தி துணி தொழில்
 2. இரும்பு எக்கு தொழில்
 3. சணல் ஆலைத்தொழில்
 4. சர்க்கரை ஆலைத்தொழில்
 5. தேயிலைத் தொழில்
 6. பொறியியல் தொழில்
 7. போக்குவரத்துக் கருவிகள் உற்பத்தி தொழிற்சாலை (Transport Industry)

அ. இரயில் எஞ்சின் தொழிற்சாலை

ஆ, கப்பல் கட்டும் தொழிற்சாலை

இ. மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை

ஈ. விமான உற்பத்தி தொழிற்சாலை

சிறுதொழிகள்

மின்னணுப் பொருட்கள், நுண்கருவிகள், எந்திர பாகங்கள், காலணிகள், விவசாயக் கருவிகள் போன்றவைகளை உற்பத்தி செய்வன சிறு தொழில்கள் ஆகும். ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத் தலைநகரங்களிலும், தொழிற்பேட்டைகள் நிறுவப்பட்டு சிறு தொழில்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அரசே கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் அளிக்கிறது. தொழில் விளைஞர், கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

குடிசைத் தொழில்

 • பட்டுப் பூச்சி வளர்த்தல்,
 • மரச்சாமான்கள்,
 • மண்பாண்டத்தொழில்,
 • கதர், கைத்தறிப்பொருட்கள் தயாரித்தல்,
 • பாய் முடைதல்,
 • தேனி வளர்ப்பு,
 • கோழி வளர்ப்பு,
 • பண்ணைத் தொழில்

போன்றவை குடிசைத் தொழில்கள் ஆகும். உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு வீட்டு உறுப்பினர்களால், வீடுகளிலேயே செய்யப்படும் தொழில் குடிசைத் தொழில் ஆகும்.

இந்திய கனிமங்கள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கனிம வளம் இன்றியமையாததாகும். நிலக்கரி, இரும்பு மாங்கனீசு, பாக்ஸைட், மைக்கா போன்ற கனிமங்கள் இந்தியாவில் அதிகம் கிடைக்கின்றன. செம்பு, ஈயம், துத்தநாகம், தங்கம் மற்றும் பெட்ரோல் போதிய அளவில்இல்லை.

இந்தியப்புவியியல் ஆய்வுத்துறை, இந்திய சுரங்க கழகம், பாரத தங்கச் சுரங்கங்களின் லிமிடெட், ஹிந்துஸ்தான் செம்பு லிமிடெட், தேசிய அலுமினிய கம்பெனி, எண்ணெய் இயற்கை வாயு நிறுவனம் முதலியன நமது நாட்டின் கனிம வள கண்டுபிடிப்பு நிறுவனங்கள் ஆகும். நம் நாட்டில் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் செயற்கைக் கோள் மூலமாக கனிமப்படிவங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

உலோக வளங்கள்

இந்திய தொழில் வளர்ச்சியால் இரும்பு எஃகு, அலுமினியம், சிமெண்ட், உரவகைகள் பெருமளயில் பயன்பாட்டிலுள்ளன. மேலாக வளங்களை நான்குவகையாக பிரிக்கலாம்.

பெருமளவில் பயன்படும் உலோகங்கள்

இரும்புத்தாதுப் பொருள் மற்றும் மைக்கா உலகச் சந்தையில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஏற்றுமதிக்கான உலோகங்கள்

 • மங்கனிஸ்,
 • பாக்சைட்,
 • ஜிப்சம்

1950ல் இந்தியாவிலிருந்து 22 வகையான உலோகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது 70க்கு மேற்பட்ட உலோகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சுய தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலோகங்கள்

 • சோடியம்,
 • சோடியம் உப்பு,
 • பாக்சைட்,
 • பாஸ்பேட்,
 • நிலக்கரி,
 • கண்ணாடி

வெளிநாடுகளைச் சார்ந்துள்ள உலோகங்கள்

 • நிக்கல்,
 • பெட்ரோலியம்,
 • துத்தநாகம்,
 • பாதரசம்,
 • தகரம்,
 • பிளாட்டினம்,
 • பித்தளை

எரிசக்தி

எரிசக்தியின் உபயோகம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். இந்தியாவின் எரிசக்தி, பெட்ரோலிய எண்ணெய், வாயு, நிலக்கரி, சாணம், எரிவாயு, காற்று ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

எரிசக்தியினால் ஏற்படும் நன்மைகள்

 1. எரிசக்தியின் உதவியினால் பலநாடுகள் தொழில்துறையில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளன.
 2. மக்களுடைய வாழ்க்கைக்குப் பலவழிகளில் உதவி செய்கிறது. பண்டங்களைச் சமைப்பதற்கு, மின் விசிறி இயக்க, பொருட்களைப் பாதுகாக்க எரிசக்தி உதவுகிறது.
 3. எரிசக்தி போக்குவரத்துத் துறையிலும், வர்த்தக துறையிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எரி சக்தி பற்றாக்குறையினால் போக்குவரத்துத்துறையில் போக்குவரத்து நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம்.
 4. விவசாயத்துறையில் நவீன தொழில் நுட்பக் கருவிகளான டிராக்டர்ஸ், அறுவடை கருவிகள் போன்றவற்றை இயக்க எரிசக்தி பெரிதும் உதவியாக உள்ளது.

வர்த்தக எரிசக்தி

மின்சாரம், பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி போன்றவை.

வர்த்தகம் அல்லாத எரிசக்தி

விறகு, சாணம், வைக்கோல் போன்றவை.

இந்திய போக்குவரத்து துறையின் வளர்ச்சி

இயக்கம் (Movement) நாகரீகத்தின் நெம்புகோல். இயக்கத்தின் வெளிப்பாடே போக்குவரத்து (Transport). பயணிகளையும், பொருட்களையும் நாட்டின் பல்வேறு பகுதிக்கு கொண்டு செல்ல போக்குவரத்து உதவுகிறது. மக்கள் இடம் பெயர்ந்து செல்வதால், அவர்களின் அறியாமை, மூடநம்பிக்கை, சாதி சமயம் பற்றிய தவறான எண்ணங்கள் குறைந்து பரந்த தேசிய மனப்பான்மை உருவாகிறது. பொருட்கள் போக்குவரத்தால் உற்பத்தி பெருகி சந்தை விரிவடைகிறது. மூலப்பொருட்களையும், உற்பத்தி செய்த பொருட்களையும், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது எளிதாகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில், விவசாயம், கனிமவளம் போன்றே போக்குவரத்தும் இன்றியமையாதது. போக்குவரத்து, ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்கிறது. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும், கனிமவளமும் எலும்பும் சதையும் எனக் கருதப்பட்டால் போக்குவரத்து அதன் நரம்பாகும். நம் நாட்டின் போக்குவரத்தைத் தரைவழி, வான்வழி, நீர்வழி என மூன்று வகையாய் பிரிக்கலாம்.

தரைவழிப் போக்குவரத்து

தரைவழிப் போக்குவரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

அவை

சாலைப் போக்குவரத்து

இந்திய திரு நாட்டில் உள்ள சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலைகள், மாநிலச் சாலைகள், மாவட்டச்சாலைகள், கிராமச் சாலைகள், எல்லைபுறச் சாலைகள் என பிரிக்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகள்

நாட்டில் உள்ள மாநிலத் தலைநகரங்களையும், முக்கிய நகரங்களையும், துறைமுகங்களையும், சுற்றுலாத்தலங்களையும், முக்கிய நகரங்களையும், துறைமுகங்களையும், புண்ணியத்தலங்களையும் இணைக்கும் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகும். இந்தச் சாலைகளை அமைத்துப் பராமரிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த சாலையின் நீளத்தில், 2 சதவீதம் உள்ள இச்சாலைகள், போக்குவரத்தில் 35 சதவீதம் அளவிற்குப் பயன்படுகின்றன.

மாநிலச் சாலைகள்

இவை மாநிலத் தலைநகரங்களையும், மாவட்டத் தலைநகரங்களையும் மற்றும் முக்கிய இடங்களையும் இணைக்கின்றன. இவற்றை மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைத்துப் பராமரிப்பு செய்கிறது.

மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளுடன் ஆங்காங்கே இணைகின்றன. மாவட்டச்சாலைகள் இவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், முக்கிய இடங்களுக்கும் சென்று வர பயன்படும் சாலைகள். இவை அந்தந்த ஊராட்சித்துறையாலும், மாவட்ட நிர்வாகத்தாலும் அமைத்துப் பராமரிக்கப்படுகின்றன.

கிராமச் சாலைகள்

இவை கிராமங்களிலும், நகரங்களிலும் தொடர்பு ஏற்படுத்துகின்றன. மாவட்டச் சாலைகளுடன் இணைகின்றன. கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் இவற்றை அமைத்துப் பராமரிக்கின்றன.

எல்லைப்புறச்சாலைகள்

அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள், மனித நடமாட்டம் இல்லாத இடங்கள் வழியாக அமையும் சாலைகள் இவை. இந்தியாவில் வடக்கு, வடகிழக்கு எல்லைப் புறங்களில் இச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைச்சாலைகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மலைகள், கோடை வாழிடங்கள், மலைத் தோட்டங்கள், மலைக் கோயில்கள், இவற்றை அடைய அமைக்கப்படும் சாலைகள் மலைச்சாலைகள் ஆகும்.

பன்னாட்டு நெடுஞ்சாலைகள்

இவை உலக வங்கி உதவியுடன் இந்தியாவின் முக்கிய சாலைகளை அண்டை நாடுகளுடன் இணைப்பதாகும்.

தங்க நாற்கர நெடுஞ்சாலைகள்

இந்தியாவின் முக்கிய நான்கு மாநகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் தங்க நாற்கர சாலைத் திட்டம்’ ஆகும்.

தொடர்வண்டிப் போக்குவரத்து

ஆசியாவிலேயயே மிகப்பெரிய அமைப்பு இந்திய தொடர்வண்டி அமைப்பாகும். இது உலக அரங்கில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1853-ல் மும்பைக்கும், தானாவிற்கும் இடையே முதல் தொடர்வண்டிப் போக்குவரத்து ஆரம்பமானது. இந்திய தொடர்வண்டி போக்குவரத்து, இந்திய பொது துறைகளில் மிகப்பெரியது. அதிக அளவில் வேலை வாய்ப்பைத் தரும் அமைப்பாகும்.

நிர்வாகம்

இந்திய இருப்பு பாதைகளின் மொத்த ஒடுபாதையின் நீளம் 1,08,513 கி.மீ. ஆகும். இது அகலவழிப்பாதை, மீட்டர் வழிப்பாதை, குறுகிய வழிப்பாதை என மூன்று வகைப்படும். 2010க்குள் அனைத்து மீட்டர் வழிப்பாதைகளும் அகல வழிப்பாதைகளாக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. நிர்வாக வசதிக்காக இந்தியதொடர் வண்டிப் போக்குவரத்து 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினிமயமாக்கப்பட்டது.

தொடர் வண்டித் தொழிற்சாலைகள்

இந்தியா, தொடர்வண்டி எஞ்சின்கள் மற்றும் தொடர்வண்டிப் பெட்டிகள் தயாரிப்பில் தன்னிறைவு கொண்டுள்ளது. சித்தரஞ்சன், வாரணாசி ஆகிய இடங்களில் தொடர்வண்டி எஞ்சின்கள் தயாரிக்கப்படுகின்றன. உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பாட்டியாலாவில் உள்ளது. தொடர்வண்டிப் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் பெரம்பூர், கபூர்தலா, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ளன.

நீர்வழிப் போக்குவரத்து

நீர் ஒரு சிறந்த போக்குவரத்து ஊடகம் ஆகும். நீர்வழிப் போக்குவரத்து சிக்கனமான, திறமைமிக்க, விரைவான போக்குவரத்து ஆகும். இது இரு வகைப்படும்.

 1. நதிநீர்ப் போக்குவரத்து
 2. கடல்வழிப் போக்குவரத்து

நதிவழிப் போக்குவரத்து

இந்தியாவில் நதிவழிப் போக்குவரத்துத் தடத்தின் நீளம் 14,500 கி.மீ. இதில் 3,700 கி.மீ. தூரம் விசைப்படகு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கங்கை நதி, பிரம்மபுத்திரா நதி, மேற்கு கடற்கரைக் கால்வாய், சம்பகரா கால்வாய், உத்யோக் மண்டல் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், கிழக்கு கடற்கரைக் கால்வாய், கோதாவரி, கிருஷ்ண பாரக் மற்றும் டி.வி.சி. கால்வாய் போன்றவை நதிநீர் வழிப் போக்குவரத்திற்கு ஏற்றவை.

கடல்வழிப் போக்குவரத்து

மூன்று பக்கம் கடல்களையும், இரண்டு நீண்ட கடலோரங்களையும் கொண்ட இந்தியாவில் கடல்போக்குவரத்து சிறப்பாக நடைபெறுகிறது. 7,516 கி.மீ. கடற்கரையை பெற்றுள்ள நாடு இந்தியா. சரக்குப் போக்குவரத்தில் உலக அரங்கில் 17வது இடத்தையும் கப்பல் போக்குவரத்தில் வளரும் நாடுகள் வரிசையில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவில் 13 பெருந்துறைமுகங்களும், 184 சிறிய துறைமுகங்களும் உள்ளன.

விமானப் போக்குவரத்து அல்லது வான்வழிப் போக்குவரத்து

1911-ல் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சிம்லாவுக்கும் அலகாபாத்துக்கும் இடையே முதல் விமானப் போக்குவரத்து அறிமுகமானது. 1929-ல் இம்பீரியல்ஸ் ஏர்வேஸ் இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே விமானப் போக்குவரத்தைத் தொடங்கியது. 1932-ல் கராச்சிக்கும், சென்னைக்கும் இடையே மும்பை வழியாக விமானப் போக்குவரத்து ஆரம்பமானது. இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை இந்தியன் ஏர்லைன்ஸ்சும், வெளிநாட்டு விமானப் போக்குவரத்தை ஏர் இந்தியாவும் நடத்துகின்றன. இது தவிர உள்நாட்டு போக்குவரத்திற்கு வாயுதுத் சேவையும் உள்ளன. 1997 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட புதிய கொள்கையின் படி 11 தனியார் விமான சேவைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

இந்தியாவில் தற்போது ஏறக்குறைய 100 விமான நிலையங்கள் உள்ளன. உலகின் எல்லா நாடுகளுக்கும் செல்ல, இந்திய விமான சேவைகள் நடைபெறுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *